தமிழர்களை மனநோயாளியாக மாற்றும் தமிழக வதை
முகாம்கள்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் இருந்து தப்பி தமிழகம் வந்த பலஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் உள்ள 110 க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் சுமார் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களைத் தவிர சிறப்பு முகாம்களும் தமிழகத்தில்
உள்ளன. செங்கல்பட்டிலும் ,பூந்தமல்லியிலும் செயல்பட்ட சிறப்பு முகாம்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள்
முன் எடுக்கப்பட்டன.
இதன்காரணமாக இந்த இரு முகாம்களை மூடிய
தமிழக அரசு, கடந்த ஆண்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருந்த பெண்கள் சிறையையும், செய்யாற்றில் செயல்பட்ட கிளைச் சிறைகளையும் முகாமாக
பெயர் மாற்றி அதில் தற்போது ஈழத் தமிழர்களை
அடைத்து வைத்துள்ளது.
திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள்
தொடர்ந்து பல அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களின் கோரிக்கை என்வென்றால் அவர்களின் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க
வேண்டும்,
இந்த இரண்டு சிறப்பு வதை முகாம்களையும்
மூடி, அதில் தற்போது அடைக்கப்பட்டுள்ளவர்களை வெளிமுகாமில் உள்ள
உறவினர்களோடு தங்க அனுமதிக்க வேண்டும் என்பதே.
இந்த சிறப்பு முகாம்கள் சிறைகளைவிட
கொடுமையானது. காரணம் இம்முகாம்களில் உள்ளவர்களைப் பார்க்க அவர்களின்
நண்பர்களோ, தொண்டுநிறுவனங்களோ அனுமதிக்கப்படுவதில்லை. சிறையில் உள்ளவர்களைக்கூட பார்க்க அனுமதிக்கும் இந்த அரசு
வழக்கறிஞர்களைக் கூட தமிழக அரசின் அனுமதி உத்தரவு இல்லை என்றால் இந்த இரண்டு
முகாம்களிலும்உள்ளவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.
சிறப்பு முகாமில் உள்ளவர்கள் பொரும்பாலும்
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச்
செல்ல முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களில் பலர் பிணையில் வந்தவர்கள். சிலர் மீது போடப்பட்ட வழக்கு விடுதலை ஆகியுள்ளது. பலரது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர்களில் பலர் முறையாக காவல்நிலையத்திலும், முகாம்களிலும் பதிவு செய்தவர்கள். அவர்களை கடவுச்சீட்டு இல்லை என்றும் வெளிநாட்டினர்
சட்டத்தின் கீழும் கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. முறைப்படி காவல்நிலையத்திலும், முகாம்களிலும் பதிவு செய்தவர்களை இந்த
பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது எந்த வகையில் நியாயமானது.
சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை
மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய மருத்துவமனையில் உரிய
சிகிச்சையும்,
அவகளுக்கு உரிய வேலையும் அதற்கு உரிய
கூலியும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு உள் மற்றும்வெளியரங்குளில் விளையாட்டு , மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றும்
அவர்களுக்கு நூலகங்கள் அமைத்துத்தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல உரிமைகளை சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 14.11.2003ல் பிரேமாவதி மற்றும் பலர் எதிர் தமிழக அரசு என்ற வழக்கில்
கூறியிருந்தும் இதுவரை அந்த உரிமைகளும்
சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இலங்கையில் சிங்கள அரசின் கீழ் உள்ள
முகாம்களைவிட மிகவும் கொடுமையான முகாமாக தமிழகத்தில் இந்த இரண்டு சிறப்பு முகாம்கள்
தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்குவது என்பது மிகவும் வேதனைக்குறியது.
இந்தியாவில் அண்டை நாடுகளில் இருந்து வந்துள்ள அகதிகள் சுதந்திரமாக இந்தியா முழுவதும் சுற்றிவருகின்றனர், வணிகம் செய்கின்றனர். தங்களின் அரசியல் உரிமைகளுக்காக சாலையில்
இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். இதை இந்திய அரசு அனுமதிக்கிறது.
ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் கொடுக்காதது
மட்டுமல்ல இந்திய ஆட்சித் தலைவர்கள் தமிழகம் வரும்போது முகாம்களில் இருந்து யாரும்
அன்றைய தேதியில் முகாமைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என 110 முகாம்களுக்கும் உத்தரவு போடுகிறார்கள்.
நைசீரியாவைச் சேர்ந்த சிலர் கடந்த ஆண்டு திருப்பூரில்
கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தமிழக அரசு அதிகாரிகளுக்கும், கியூ பிரிவு காவல்துறைக்கும் கொடுத்த தொல்லையை தாங்க முடியாத
தமிழக அதிகாரிகள் சொந்த செலவில் அவர்களை அவர்களின் தேசத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.
வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த
தூதரக அதிகாரிகள் சிறைக்கு வந்து அவர்களை சந்தித்து , தேவையான பொருள் மற்றும் சட்ட உதவிகளைச் செய்வார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் நாடற்றவர்களாய் ஆக்கப்பட்டுள்ளதால் அவர்களைப் பார்க்க சிறையிலும்
முகாமிலும் யாரும் வருவதில்லை . அவர்கள் குடுமபங்பளையும் உறவுகளையும்
பிரிந்து நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் , அவர்களில் பலர் மனநோயாளியாக மாறியுள்ளனர்.
தமிழக மக்களே இந்த முகாம்கள் நமது மண்ணின் அவமானச் சின்னங்கள்.
இந்த முகாம்களை மூட வழி சொல்லுங்கள்.