செவ்வாய், 19 மே, 2015

தமிழக வதை முகாம்கள்.


 தமிழர்களை மனநோயாளியாக மாற்றும் தமிழக வதை முகாம்கள்.


 இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் இருந்து தப்பி தமிழகம் வந்த பலஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் உள்ள 110 க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் சுமார் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

           இந்த முகாம்களைத் தவிர சிறப்பு முகாம்களும் தமிழகத்தில் உள்ளன. செங்கல்பட்டிலும் ,பூந்தமல்லியிலும் செயல்பட்ட சிறப்பு முகாம்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டன. இதன்காரணமாக இந்த இரு முகாம்களை மூடிய தமிழக அரசு,  கடந்த ஆண்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருந்த பெண்கள் சிறையையும், செய்யாற்றில் செயல்பட்ட கிளைச் சிறைகளையும் முகாமாக  பெயர் மாற்றி அதில் தற்போது ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ளது.

    திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்து பல அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களின் கோரிக்கை என்வென்றால் அவர்களின் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்இந்த இரண்டு சிறப்பு வதை முகாம்களையும் மூடி, அதில் தற்போது அடைக்கப்பட்டுள்ளவர்களை வெளிமுகாமில் உள்ள உறவினர்களோடு தங்க அனுமதிக்க வேண்டும் என்பதே.

        இந்த சிறப்பு முகாம்கள் சிறைகளைவிட கொடுமையானது. காரணம் இம்முகாம்களில் உள்ளவர்களைப் பார்க்க அவர்களின் நண்பர்களோ, தொண்டுநிறுவனங்களோ அனுமதிக்கப்படுவதில்லை. சிறையில் உள்ளவர்களைக்கூட பார்க்க அனுமதிக்கும் இந்த அரசு வழக்கறிஞர்களைக் கூட தமிழக அரசின் அனுமதி உத்தரவு இல்லை என்றால்   இந்த இரண்டு முகாம்களிலும்உள்ளவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.

சிறப்பு முகாமில் உள்ளவர்கள் பொரும்பாலும்  ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களில் பலர் பிணையில் வந்தவர்கள். சிலர் மீது போடப்பட்ட  வழக்கு விடுதலை ஆகியுள்ளது. பலரது வழக்குகள் நிலுவையில் உள்ளன.


  அவர்களில் பலர் முறையாக காவல்நிலையத்திலும், முகாம்களிலும் பதிவு செய்தவர்கள். அவர்களை கடவுச்சீட்டு இல்லை என்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழும் கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. முறைப்படி காவல்நிலையத்திலும், முகாம்களிலும் பதிவு செய்தவர்களை இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது எந்த வகையில் நியாயமானது.


   சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய மருத்துவமனையில் உரிய  சிகிச்சையும்அவகளுக்கு உரிய வேலையும் அதற்கு உரிய கூலியும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு உள் மற்றும்வெளியரங்குளில் விளையாட்டு , மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நூலகங்கள் அமைத்துத்தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல உரிமைகளை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 14.11.2003ல் பிரேமாவதி மற்றும் பலர் எதிர் தமிழக அரசு என்ற வழக்கில்  கூறியிருந்தும் இதுவரை அந்த உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
     
        இலங்கையில் சிங்கள அரசின் கீழ் உள்ள முகாம்களைவிட மிகவும் கொடுமையான முகாமாக தமிழகத்தில் இந்த இரண்டு சிறப்பு முகாம்கள் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்குவது என்பது மிகவும் வேதனைக்குறியது.

இந்தியாவில் அண்டை நாடுகளில் இருந்து வந்துள்ள  அகதிகள் சுதந்திரமாக இந்தியா முழுவதும் சுற்றிவருகின்றனர், வணிகம் செய்கின்றனர். தங்களின் அரசியல் உரிமைகளுக்காக  சாலையில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். இதை இந்திய அரசு அனுமதிக்கிறது.
ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் கொடுக்காதது மட்டுமல்ல இந்திய ஆட்சித் தலைவர்கள் தமிழகம் வரும்போது முகாம்களில் இருந்து யாரும் அன்றைய தேதியில் முகாமைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என  110 முகாம்களுக்கும் உத்தரவு போடுகிறார்கள்.

நைசீரியாவைச் சேர்ந்த சிலர் கடந்த ஆண்டு திருப்பூரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழக அரசு அதிகாரிகளுக்கும், கியூ பிரிவு காவல்துறைக்கும் கொடுத்த தொல்லையை தாங்க முடியாத தமிழக அதிகாரிகள் சொந்த செலவில் அவர்களை அவர்களின் தேசத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.


          வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் சிறைக்கு வந்து அவர்களை சந்தித்து , தேவையான பொருள் மற்றும் சட்ட உதவிகளைச் செய்வார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் நாடற்றவர்களாய் ஆக்கப்பட்டுள்ளதால் அவர்களைப் பார்க்க சிறையிலும் முகாமிலும் யாரும் வருவதில்லை . அவர்கள் குடுமபங்பளையும் உறவுகளையும் பிரிந்து நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் , அவர்களில் பலர் மனநோயாளியாக மாறியுள்ளனர்.

தமிழக மக்களே இந்த முகாம்கள் நமது மண்ணின் அவமானச் சின்னங்கள்.
இந்த முகாம்களை மூட வழி சொல்லுங்கள்.




   

வியாழன், 14 மே, 2015

ஏன் இந்தப் போராட்டம்


இலங்கையின் பூர்விக குடி மக்களான ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை  முதலில் ஆதரிப்பது போல நடித்து ஆயுத பயிற்சி அளித்தது இந்திய அரசு. பின்னர் சிங்கள அரசோடு சேர்ந்து கொண்டு அமைதிப்படை என்ற பெயரில்  நூற்றுக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து பல வன்முறை செயல்களில் ஈடுபட்டது இந்திய ராணுவம்.

 தொடர்ந்து இந்திய அரசு ஆயுதங்களையும், படையியல் பயிற்சிகளையும் வழங்கி வந்தது. 2007 முதல் 2009 வரைநடந்த  தாக்குதலில் இந்திய அரசின் முப்படைகளும் சிங்கள அரசின் ராணுவத்துடன் இணைந்து பல ஆயிரம் தமிழர்களை ஈவு இரக்கமற்றவகையில் படுகொலை செய்தனர். சர்வதேச சமுதாயம் இதை தடுக்க முன்வந்தபோது இந்திய அரசு அந்த நாடுகளை தலையிடவிடாமல் தடுத்துவிட்டது.தமிழகம் வழியாக எந்த உதவிகளும் செய்யவிடாமல் இந்திய அரசு தடுத்துவிட்டது.

சிலர் இந்த இன அழிப்புக்கு ராசபக்சே, சோனியாபோன்ற தனிநபர்களை காரணம் காட்டி உண்மையை மறைக்க முயல்கின்றனர். சிலர் ஐ.நாவை காரணமாக காட்டுகின்றனர்.
உண்மையில் இந்த இனப்படுகொலைக்கு காரணமே இந்தியா தான்.
இந்தியா தான் முதன்மைக் குற்றவாளி.


எனவே தான், எங்கள் இனத்தை படுகொலை செய்து, தமிழீழ விடுதலைக்கு எதிராக செயல்படும் இந்திய அரசை கண்டித்து இந்த முற்றுகைப்போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்த்தேச மக்கள் கட்சியின் இந்த முற்றுகைப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பங்கேற்க  அழைக்கிறோம்.


செவ்வாய், 12 மே, 2015

சட்டத்தின் முன் அனைவரும் சமம் ?


ட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது உண்மை அல்ல என்பதற்கு நாம் நான்கு வழக்குகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் தொடர்பான வழக்குகள்.


முதலில் ஜெயல்லிதா கடந்த 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு.


18 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கு. இந்த வழக்கை விசாரணை செய்த  அமர்வு நீதிமன்ற நீதிபதி குன்கா செயலலிதா உள்ளிட்ட 4 நபர்களும் குற்றவாளிகள் என 27.09.2014ல்  அறிவித்து அவர்களுக்கு  4 ஆண்டுகள் தண்டனை வழங்கினார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 18.12.2014 அன்று பிணைவழங்கியது.

பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது என தொடரப்பட்ட வழக்கை இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் அடுத்தவாரமே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு அவர்கள் 21.04.2015 அன்று விசாரணை செய்து 27.04.2015 அன்று தீர்ப்பு வழங்கினர். 12.05.2015 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தார். நீதிபதி குனகாவிற்கு கணக்கு போடத் தெரியவில்லை என்று கூட்டி கழித்துப் பர்த்துவிடுதலைஎன்று அறிவித்துவிட்டார். இந்த வழக்கு என்னவேகத்தில் நடந்தது எப்படி விடுதலை கிட்டியது என்பது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துச் சொல்வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பின்னனியில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியும் முன்னால் தலைமைநீதிபதியும் உள்ளதாகவும் 1000 கோடிகள் பேரம்  என்றும்  சொல்கிறார்கள்.



      அடுத்தாக இரண்டாவது வழக்கு சல்மான்கான் வழக்கு. கடந்த 2002ல்  குடித்துவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டி ஒருவரை மரணமடைய செய்து நான்கு நபர்கள் காயம்பட்ட  வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கி  மும்பை அமர்வு நீதிபதி தேச்பான் முன்டே கடந்த 06.05.2015 அன்று மாலை தீப்பளித்தார். அன்றைய தினமே சிலமணி நேரங்களிலேயே மும்பை உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.
     


     மூன்றாவதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 1987ல் சென்னையில் சூளைமேடு பகுதியில் பொதுமக்களை கண்மூடித்தனமாக டக்லஸ் தேவானந்தாவும் அவரது ஆட்களும் சுட்டதில் திருநாவுக்கரசு என்ற மாணவர் உயிர் இழந்தார் பலர் படுகாயம்  அடைந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டக்லஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு வராமல் தலைமறைவாகி விட்டார். பின் இந்திய உளவுத்துறையின் கட்டளைப்படி, உளவுத்துறை துணையுடன்  இலங்கை சென்று சிங்கள அரசிற்கு ஆதரவாக செயல்பட்டார்தமிழர்களை படுகொலை செய்வதில் சிங்கள அரசிற்கு துணைநின்றார்.


    கடந்த 1994ல் டக்லஸ் தேடப்படக்கூடிய குற்றவாளியாக சென்னை நீதிமன்றம் அறிவித்தது.அனால் அவரை கைது செய்ய தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.


  இந்நிலையில் கடந்த 2010ல் டக்லஸ், ராசபக்சேவுடன்  டில்லி  வந்தபோது அவரை கைது செய்ய சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டக்லஸ் தன்மீதான பிடிகட்டளையை ரத்து செய்ய  பல மனுக்கல் தாக்கல் செய்தார்.ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
  

    கடந்த 2014ல் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் சுப்பிரமணிய சாமியின் வழக்கறிஞரை வைத்து ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம் ஏற்றுக் கொண்டு டக்லஸ் இலங்கை தூதரகத்தில் இருந்து கொண்டே காணொளி மூலம் வழக்கை நடத்தலாம் என உத்தரவிட்டார். டக்லஸ்க்காக நீதிபதியிடம் சிபாரிசு செய்து இந்த தீர்ப்பை அவருக்கு வாங்கித்தந்தவர்களில் இரண்டுபேர் முக்கியமானவர்கள் ஒருவர் சு.சாமி இரண்டாமவர் க.மொழி. இதனால் சாமியின் வழக்கறிஞருக்கு உயர் பதவி அளிக்கப்பட்டதுஇந்தியாவில் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் இந்தவகையான தளர்வு இதுவரை வழங்கப்பட்டதில்லை.( இந்த தீர்ப்பு தாவுத் இப்பராகிமுக்கு பொருந்தாதாம்).
      


    நான் சொல்லப்போகும் நான்காவது வழக்கு 7 தமிழர்கள் வழக்கு. தமிழக அரசு விடுதலை செய்வதாக உத்தரவிட்டும் , உச்ச நீதிமன்றத் தடையால் விடுவிக்கப்படாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் நாதியற்று தமிழர்களின் வழக்கு. உச்சநீதிமன்றம் 3 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு 15 மாதங்கள் ஆகியும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை கூட்டமலேயே உச்சநீதிமன்றம் காலம் கடத்தி வருகிறது.


சட்டத்தின் முன் அனைவரும் சமம், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்ட்ட நீதியாகும் என்பது சட்டத்தில் இருக்கலாம் ஆனால் நடைமுறையில் இல்லை.அதிகாரம் இல்லாதவர்கள் அடிமைகள். அவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்காது.பணம் உள்ளவர்களுக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த (இந்திய)சட்டமும் நீதித்துறையும் வால் ஆட்டும்.

 நமது தேசத்தை மீட்போம்.
 தமிழர்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்.






  

செவ்வாய், 5 மே, 2015

தெலுங்கானா - பச்சைப் படுகொலைகள்



இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா?
**************************************
கடந்த வாரம் தெலுங்கானா மாநிலத்தில்  இருவேறு போலிமோதல் படுகொலைகள் நடந்துள்ளது. முதலில் கடந்த 07.03.2015 அன்று நலகொண்டா மாவட்டத்தில் சூர்யபேட் பேருந்து நிலையத்தில் ரோந்து சென்ற காவலர்கள் மீது இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்த முகமது இசாசுதின் மற்றும் அஸ்லாம் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டதாகவும், காவல்துறையினர் திருப்பிச்சுட்டதில் இருவரும் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர் என காவல்துறை தெரிவித்த்து . இந்த சம்பவத்தில் இரண்டு காவல்துறையினர் காயம் அடைந்து பின் அவர்கள் மருத்துவமனையில் இறந்துவிட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 9.03.2015 அன்று வாராங்கால் சிறையில் இருந்த சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் விருகத்அகமத், சேயத் அஜ்மல், முகமது ஜாகீர், இசார்கான் மற்றும் முகமது அனிப் ஆகியோர் ஐதராபாத் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஆந்திராவில் ஜதராபாத் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கடந்த 2010ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

சிறையில் இருந்து போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றபோது  காவல்துறை 
வாகனம் நல்கொண்டா - வாராங்கால் எல்லையில் சென்றுக் கொண்டு இருந்தபோது விருகத் அகமது என்பவர்  தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்து காவல்துறையினரின் ஆயுதங்களை பறிக்க முயற்சி செய்ததாகவும் அப்போது காவல்துறையினத் நடத்திய எதிர் தாக்குதலில் அந்த 5 சிமி இயக்கத்தினரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்ட 5 பேரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள் என்றும்  பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 2014 ல்  இந்திய உச்சநீதிமன்றம் பியூசிஎல் எதில் மகாராஸ்டிர அரசு வழக்கில் என்கவுன்டர் வழக்குகளில் காவல்துறையினர் மீது தொடர்புடைய குற்ற வழக்கு( கொலை வழக்குபதிவு செய்யவேண்டும் என்றும் , தொர்புடைய காவல்துறையினருக்கு பதவி உயர்வு போன்ற சலுகைகள் வழங்கக்கூடாது என பல வழிகாட்டு நெரிகளை தனது  உத்தரவில் கூறியிருந்தாலும்  போலிமோதல் கொலைகள் தொடர்கின்றன. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
  


இந்த துப்பாக்கிச்சூட்டை கவனமாக  பார்த்தால் சிறையில் இருந்து 5பேரும் காவல்துறையினர் வாகனத்தில் துப்பாக்கி பாதுகாப்புடன் , கைவிலங்கு போட்டு கொண்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பலபுகைப்படங்கள் வெளிவந்துள்ளன, அவற்றில்  அவர்களின் கையில்போடப்பட்ட கை விலங்கு வாகன இருக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது

எனவே அவர்கள் தப்பித்துச் செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏதும் இல்லை. இது அப்பட்டமான படுகொலை. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நிரபராதிகள் எனநிருபிக்கப்படும் முன் சட்டத்தை தூக்கி எரிந்துவிட்டு காவல்துறையினர் தங்களின் கைகளில் சட்டத்தையும் நீதிமன்றத்தை மதிக்காமல் இந்த படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர். சட்டத்தின் ஆட்சி இந்திய துணைக்கண்டத்தில் நடக்கவில்லை என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


………………………………………………