வெள்ளி, 17 ஏப்ரல், 2015

திராவிட இயக்கங்களின் இரண்டகம்



     கடந்த சில  மாதங்களாக திராவிட  இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழினத்திற்கு எதிராக செயல்பட்டு வருவது வருந்தத்தக்கது. தமிழர்களை  “திராவிடர்கள்”  என்று கூறவது ஏற்க முடியாது. திராவிட என்ற சொல் சமக்கிருதச் சொல். ஆரியர்கள் நம்மை தமிழர் என்று சொல்ல முடியாமல் சரியற்ற உச்சரிப்பில் திராவிட எனக்கூறியதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.
திராவிட என்ற சமக்கிருத சொல்லில் இருந்துதான் தமிழ் என்கிற சொல் பிறந்ததாக ஆரியர்களும் திராவிட இயக்கத்தினர் சிலரும் பொய் பரப்பி வருகின்றனர்.  சங்க இலக்கியங்களிலும், பிந்தைய இலக்கியங்களிலும் திராவிட என்ற சொல் கிடையாது. கால்டுவெல் தென் இந்திய மொழிகளை ஒப்பாய்வு செய்த போதுதான் திராவிட மொழிக்குடும்பம் என்கிற சொல்லை பயன்படுத்துகிறார்.

    ஆரியர்களுக்கு எதிராக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வந்துள்ளனர். தமிழ் மொழியை கற்று அதன் மூலம் சமக்கிருதத்தை தமிழுடன் கலந்து பல இலக்கியங்களை உருவாக்கி  தமிழை அழிக்க ஆரியர்கள் முயன்றனர். ஆனாலும் தமிழ் மொழியை  அழிக்க முடியவில்லை. சமக்கிருதம் தான் அழிந்துபோனது. தமிழின் தனித்தன்மையை காக்க , தமிழில் கலந்துள்ள சமக்கிருத சொற்களை நீக்கினர்  தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழறிஞர்கள்.
   
    இலங்கையில் நடந்த இனப்படு கொலையில் தமிழர்கள் பல்லாயிராக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை  இந்திய அரசு முன்னின்று நடத்தியதுதமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் ஆதரவாய் நின்றதால் தமிழினப்படுகொலைகளை தடுக்க முடியவில்லை. இந்தியாவில் இருகக்க்கூடிய  மற்ற திராவிட மொழிக்குடும்பத்தை(?) சேர்ந்தவர்கள் ( ஆந்திரா, கருநாடகா, கேரளா) இந்த இனப்படுகொலைக்கும் தங்கள் இனத்திற்கும்  சம்பந்தமில்லை என வேடிக்கை பார்த்தார்கள்.
இந்த காலகட்டத்தில் தமிழர்கள் மீதான வன்மம் கொண்டு ஆந்திர, கர்நாடக, கேரள அரசுகள் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய   ஆற்றுநீரை வழங்க மறுத்து வருகின்றன. தமிழர்களுக்கு எதிராக  அணுஉலைகளும், மீத்தேன், நீயூட்ரினோ,டெர்லைட்  முதலிய திட்டங்களும்  கச்சத்தீவு, மீனவர் படுகொலை என பல உரிமைகள் பறிக்கப்பட, தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் காரணமாய் உள்ளநிலையில் தமிழர்களிடம்  நாம் திராவிடர்களா என்ற கேள்வி முன்னுக்கு வந்துள்ளது.

     தமிழர்களை ஆரியர்கள் சூத்திரர்கள் என்று சொல்லுவதை நாம் எப்படி ஏற்க முடியாதோ அதே போன்றது தான்  நம்மை திராவிடர்கள் என்று  அடையாளப்படுத்துவதை நாம் ஏற்க முடியாது.


     பெரியார் தமிழத்தில் பல சமூக மாற்றத்திற்காக உழைத்தவர். அவரது உழைப்பை நாம் மதிக்கவேண்டும். பெரியார் இன்றைய காலத்தில் இருந்திருந்தால் அவர் திராவிடர் கழகம் தொடங்கியதையும் திராவிட இனமாய் தமிழர்களை சிந்திக்க வைத்ததையும் தவறு என்று கூறியிருப்பார். பெரியார் யாரையும்  சிந்தித்து செயல்படச் சொன்னவர். ஆனால் இன்று உள்ள திராவிட கட்சிகள் பெரியார்  சொன்னார் என்று கூறி திராவிடத்தை கட்டி அழச்சொல்கிறார்கள். அதைவிட ஒருபடி மேலே போய் தமிழ்த்தேசம் என்று சிலர் கிளம்பிவிட்டார்கள் அவர்களை எதிர்க்க வேண்டும் என பேசுகிறார்கள். திராவிடர்கள் முன்னேற்றத்திற்காக இயங்கும் கட்சிகள், இயக்கங்கள் தான் தமிழகத்தில் அதிகம்.
    

     
       20 தமிழர்கள் ஆந்திரத்தில் படுகொலை செய்யப்பட்டது, கர்நாடக அரசு புதிய அணைகட்டுவது, எனபல போராட்டங்கள் நடந்துவருவதை மறைத்து, தமிழகத்தில் இருக்கும்  சிக்கல்களை எல்லாம் திசை திருப்புவதற்காக  திராவிடர் கழக தலைவர் வீரமணி இன்னும் ஒருபடி மேலேபோய் தாலி அறுப்பு நிகழ்வை நடத்துகிறார். பார்ப்பன இந்துத்துவ சக்திகளும் தாலிக்கு ஆதரவாய் போராடுவதாக தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

   சமக்கிருதத்தையும், ஆரிய பண்பாட்டையும் தூக்கிப்பிடித்து தமிழ் மொழியையும் இன உணர்வையும்  அழிக்கநினைக்கிறது பார்ப்பனியம். தமிழனை திராவிடனாக்கி,  மொழி உணர்வையும், இன உணர்வையும் அழித்து,  தமிழினம்  தனி தேசிய இனமாய் உருவாகிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறது திராவிடம்.


   இந்திய உளவுத்துறையின் திட்டப்படி திராவிடமும், ஆரியமும் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு களமாடுகின்றனர். திராவிட இயக்கங்களில் உள்ள தமிழர்கள் இதைபுரிந்து கொள்ளவேண்டும்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக