புதன், 29 ஏப்ரல், 2015

பாரதீய ,சிங்கள ஒநாய்களின் புதிய வலை



     
      கடந்த   1983 முதல் தமிழக மீனவர்கள்  இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதும் , படகுகள்  கைப்பற்றப்படுவதும் , கொலை செய்யப்படுவதும், கடத்தப்படுவதும்  தொடர்கிறது.

    பிரச்சனைக்குக் காரணம் கச்சத்தீவு. தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கையுடன் நட்புறவு பாராட்டுவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு தானமாக 1976ல் வழங்கியது.

   பெரும்பாலும் மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் கச்சத்தீவுன் அருகில் தான். இது தொடர்பாக  தமிழக கடலோர காவல் நிலையங்களில் 400 க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கை சிங்கள கடற்படையினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது  ( இதுவரை ஒரு சிங்கள கடற்படையினர் கூட கைது செய்யப்படவில்லை)    இவற்றில் பெரும்பாலும் குற்ற சம்பவம் நடந்த இடமாக  கச்சத்தீவுற்கு அருகில் , இந்திய எல்லைக்குள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




2009 க்கு முன்பு மீனவர்கள் சுடப்படுவதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தான் என்றும், சிங்கள கடற்படையினர் விடுதலைப்புலிகள் என்று தவறாக சுட்டுவிட்டதாக   தமிழக அரசியல் கட்சிகள் சிலவும் , இந்திய அரசியல் கட்சிகள் பலருமாய்  கூப்பாடு போட்டார்கள்.


2009 க்குப்பின் எல்லைதாண்டுகிறார்கள், இரட்டைமடிவலையை பயன்படுத்துகிறார்கள், கடத்தல்காரர்கள்  என்றும் அதனால்தான் சுட்டுக் கொள்கிறோம் என்று துணிச்சலாக சிங்கள அரசு கூறுகிறது. இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபின் இலங்கை பிரதமர் ரணில்விக்ரம சிங்கேயும் இதேபோல் பேட்டி கொடுக்கிறார்.இலங்கை அரசியல் வாதிகளும் தங்கள் பங்குக்கு சென்னை விமானநிலையத்தில் இறங்கி மீனவர்களை சுடுவோம் என்று பேட்டிகொடுகின்றனர்.

பாரதீய சனதாவும்( இந்திய அரசும்) ,  சிங்கள அரசும்  இப்போது மீனவர் சிக்கலை இலங்கை  தமிழ் மீனவர்களுக்கும்  தமிழக மீனவர்களுக்குமான பிரச்சனை என்றும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதே இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதரத்திற்காக என்றும் பேசத்தொடங்கியுள்ளனர்.

இன்று (29.04.2015  )பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர் சந்திப்பின்போது “இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மீனவர்கள் எதிர்ப்பதால்தான், தமிழக மீனவர்களை அந்த நாட்டு கடற்படையினர் கைது செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறதுஎன்று கூறியுள்ளார்.மேலும் தங்களின் ஆட்சியில் இதுவரை 996 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்" என்று அறிவித்துள்ளார். இவர்கள் ஆட்சியின் போதுதான் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதைமட்டும் சொல்ல  மறந்துவிட்டார். 


 இன்று புதுதில்லியில் தமிழக மீனவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஜ்மாசுவராஜ் யை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பாரதீய ஜனதா கட்சியின்  தலைவர்கள் உடன் இருந்தனர். இந்த கூட்டத்தில் கடல்வள ஆய்வாளர் சூரிய நாராயணராவ் கூறுகையில், மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டும் போதுதான் பிரச்சினைகள் வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது இலங்கையில் வசிக்கும் உங்கள் தொப்புள் கொடி உறவான தமிழ் மீனவர்கள் தான். இதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்என்று கூறியுள்ளார்.

இந்திய அரசியல் கட்சிகள் எல்லாம்  தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் எதிராக குரல் எழுப்புகின்றன். மேலும்  சிங்கள அரசிற்கு ஆதரவாகவே செயல்படுகிறனர். தமிழக அரசுகள் நவீனகாலத்திலும் தந்தியடிப்பது கடிதம்,  எழுதுவது என்று காகிதங்களை வீணடிக்கின்றனர்.

தமிழனின் கடல் எல்லையில் இரண்டு நாட்டு (தமிழ் நாடு , தமிழீழ நாடு) தமிழர்களும் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்ற நிலையை எட்டும்போதுதான் இந்தச் சிக்கல் தீரும். இதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.   பாரதீய - சிங்கள ஓநாய் கூட்டங்களின் வலையில் சிக்கினால் தமிழனின் கதி மீனின் கதிதான்.





சனி, 18 ஏப்ரல், 2015

தமிழகத்திற்கு எதிராக செயல்படும் இந்திய தேர்தல் கட்சிகள்



      காவிரிக்கு குறுக்கே மேகதாது என்றபகுதியில் கர்நாடக அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதன் ஆய்வுப்பணிக்காக  நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு செல்லும் காவிரி நீர் தடுக்கப்படும். தமிழகத்தில் சில கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.

       தமிழகத்தின் எதிர்ப்பால் கோபமடைந்துள்ள கர்நாடகாவும், பதிலுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்தது. கர்நாடக ரக்ஷனாவேதிகே, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி உள்ளிட்ட கன்னட அமைப்புகள் மற்றும், கன்னட  திரைப்பட வர்த்தக சபை, டாக்சி ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட 500 அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பாரதீய ஜனதா, காங்கிரச் உள்ளிட்ட இந்திய கட்சிகள் கன்னட அமைப்புகள் நடத்திய இந்த போராட்டத்தில் பங்கெடூத்துக் கொண்டனர்.

   மேகதாது தடுப்பு அணை  விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் 500 அமைப்புகள் சார்பில் இன்று வேலைநிறுத்தம்     காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. மாலை 6 மணிவரை பந்த் நடைபெற்றது. பொதுவாக காவிரி விவகாரங்களில் வட கர்நாடக மக்கள், பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எனவே, தென் கர்நாடகாவின், பெங்களூரு, ராம்நகரம், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், கோலார், துமகூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில், போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திரைப்பட வர்த்தகசபை  ஆதரவு தெரிவித்திருப்பதால், கன்னட திரைப்பட நடவடிக்கைகள் நடைபெறவில்லை. அரங்குகளில் திரைப்படங்கள் காண்பிக்கப்படவில்லை.  கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்திருந்ததால், தமிழகத்துக்கு பேருந்துகள்  இயங்கவில்லை. எனவே, தமிழகம்-கர்நாடகா இடையேயான போக்குவரத்து இன்று பகல் முழுவதும் நடைபெறவில்லை. விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள், அங்கேயேகாத்திருக்கவேண்டியதாயிற்று.

    

இந்நிலையில், மைசூருவில் இன்று சிவராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவின் நிலம், நீர், மொழி விவகாரங்களில் கன்னட திரையுலகம் எப்போதும் ஆதரவு தந்து வந்துள்ளது. மேகதாது விவகாரத்திலும், கன்னட திரையுலகம் தனது ஆதரவை அளிக்கும். மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கன்னட திரையுலகம் சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும். எந்த மாதிரி போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று நான் கூற மாட்டேன். நாட்டு நலனுக்காக நடைபெறும் போராட்டம், ஒருவரது தலைமையில் நடைபெற கூடாது. கூட்டு தலைமையின் கீழ் அந்த போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.
  

ஆனால்  தமிழகத்தில் உள்ள இந்திய தேர்தல் கட்சிகள் தமிழக மக்களின் ஆற்றுநீர்(காவிரி, பெரியாறு, பாலாறு, பவானியாறு) உரிமைக்காக என்றுமே குரல் கொடுத்த்தில்லை. சிலர் இரட்டைவேடம் போடுகிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன்,நீயூட்ரினோ, அணுஉலை, ஸ்டெர்லைட்ஆகிய திட்டங்களை ஆதரிக்கிறார்கள். 


வெள்ளி, 17 ஏப்ரல், 2015

திராவிட இயக்கங்களின் இரண்டகம்



     கடந்த சில  மாதங்களாக திராவிட  இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழினத்திற்கு எதிராக செயல்பட்டு வருவது வருந்தத்தக்கது. தமிழர்களை  “திராவிடர்கள்”  என்று கூறவது ஏற்க முடியாது. திராவிட என்ற சொல் சமக்கிருதச் சொல். ஆரியர்கள் நம்மை தமிழர் என்று சொல்ல முடியாமல் சரியற்ற உச்சரிப்பில் திராவிட எனக்கூறியதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.
திராவிட என்ற சமக்கிருத சொல்லில் இருந்துதான் தமிழ் என்கிற சொல் பிறந்ததாக ஆரியர்களும் திராவிட இயக்கத்தினர் சிலரும் பொய் பரப்பி வருகின்றனர்.  சங்க இலக்கியங்களிலும், பிந்தைய இலக்கியங்களிலும் திராவிட என்ற சொல் கிடையாது. கால்டுவெல் தென் இந்திய மொழிகளை ஒப்பாய்வு செய்த போதுதான் திராவிட மொழிக்குடும்பம் என்கிற சொல்லை பயன்படுத்துகிறார்.

    ஆரியர்களுக்கு எதிராக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வந்துள்ளனர். தமிழ் மொழியை கற்று அதன் மூலம் சமக்கிருதத்தை தமிழுடன் கலந்து பல இலக்கியங்களை உருவாக்கி  தமிழை அழிக்க ஆரியர்கள் முயன்றனர். ஆனாலும் தமிழ் மொழியை  அழிக்க முடியவில்லை. சமக்கிருதம் தான் அழிந்துபோனது. தமிழின் தனித்தன்மையை காக்க , தமிழில் கலந்துள்ள சமக்கிருத சொற்களை நீக்கினர்  தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழறிஞர்கள்.
   
    இலங்கையில் நடந்த இனப்படு கொலையில் தமிழர்கள் பல்லாயிராக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை  இந்திய அரசு முன்னின்று நடத்தியதுதமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் ஆதரவாய் நின்றதால் தமிழினப்படுகொலைகளை தடுக்க முடியவில்லை. இந்தியாவில் இருகக்க்கூடிய  மற்ற திராவிட மொழிக்குடும்பத்தை(?) சேர்ந்தவர்கள் ( ஆந்திரா, கருநாடகா, கேரளா) இந்த இனப்படுகொலைக்கும் தங்கள் இனத்திற்கும்  சம்பந்தமில்லை என வேடிக்கை பார்த்தார்கள்.
இந்த காலகட்டத்தில் தமிழர்கள் மீதான வன்மம் கொண்டு ஆந்திர, கர்நாடக, கேரள அரசுகள் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய   ஆற்றுநீரை வழங்க மறுத்து வருகின்றன. தமிழர்களுக்கு எதிராக  அணுஉலைகளும், மீத்தேன், நீயூட்ரினோ,டெர்லைட்  முதலிய திட்டங்களும்  கச்சத்தீவு, மீனவர் படுகொலை என பல உரிமைகள் பறிக்கப்பட, தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் காரணமாய் உள்ளநிலையில் தமிழர்களிடம்  நாம் திராவிடர்களா என்ற கேள்வி முன்னுக்கு வந்துள்ளது.

     தமிழர்களை ஆரியர்கள் சூத்திரர்கள் என்று சொல்லுவதை நாம் எப்படி ஏற்க முடியாதோ அதே போன்றது தான்  நம்மை திராவிடர்கள் என்று  அடையாளப்படுத்துவதை நாம் ஏற்க முடியாது.


     பெரியார் தமிழத்தில் பல சமூக மாற்றத்திற்காக உழைத்தவர். அவரது உழைப்பை நாம் மதிக்கவேண்டும். பெரியார் இன்றைய காலத்தில் இருந்திருந்தால் அவர் திராவிடர் கழகம் தொடங்கியதையும் திராவிட இனமாய் தமிழர்களை சிந்திக்க வைத்ததையும் தவறு என்று கூறியிருப்பார். பெரியார் யாரையும்  சிந்தித்து செயல்படச் சொன்னவர். ஆனால் இன்று உள்ள திராவிட கட்சிகள் பெரியார்  சொன்னார் என்று கூறி திராவிடத்தை கட்டி அழச்சொல்கிறார்கள். அதைவிட ஒருபடி மேலே போய் தமிழ்த்தேசம் என்று சிலர் கிளம்பிவிட்டார்கள் அவர்களை எதிர்க்க வேண்டும் என பேசுகிறார்கள். திராவிடர்கள் முன்னேற்றத்திற்காக இயங்கும் கட்சிகள், இயக்கங்கள் தான் தமிழகத்தில் அதிகம்.
    

     
       20 தமிழர்கள் ஆந்திரத்தில் படுகொலை செய்யப்பட்டது, கர்நாடக அரசு புதிய அணைகட்டுவது, எனபல போராட்டங்கள் நடந்துவருவதை மறைத்து, தமிழகத்தில் இருக்கும்  சிக்கல்களை எல்லாம் திசை திருப்புவதற்காக  திராவிடர் கழக தலைவர் வீரமணி இன்னும் ஒருபடி மேலேபோய் தாலி அறுப்பு நிகழ்வை நடத்துகிறார். பார்ப்பன இந்துத்துவ சக்திகளும் தாலிக்கு ஆதரவாய் போராடுவதாக தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

   சமக்கிருதத்தையும், ஆரிய பண்பாட்டையும் தூக்கிப்பிடித்து தமிழ் மொழியையும் இன உணர்வையும்  அழிக்கநினைக்கிறது பார்ப்பனியம். தமிழனை திராவிடனாக்கி,  மொழி உணர்வையும், இன உணர்வையும் அழித்து,  தமிழினம்  தனி தேசிய இனமாய் உருவாகிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறது திராவிடம்.


   இந்திய உளவுத்துறையின் திட்டப்படி திராவிடமும், ஆரியமும் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு களமாடுகின்றனர். திராவிட இயக்கங்களில் உள்ள தமிழர்கள் இதைபுரிந்து கொள்ளவேண்டும்.