புதன், 18 மே, 2016

முள்ளிவாய்காலுக்கு முற்றுப்புள்ளி


.
   ழத்தில் நடந்த  கொடூரமான இன அழிப்பை நினைவு கூறும் நாள் இன்று. ஈழத்திலும் , இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இந்த கோரப் படுகொலைகளை நினைவு கூர்ந்து பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.  ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகளுக்கும், தாக்குதலில் மரணமடைந்த  மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.
    
   தங்களது போராளிகளையும் உறவுகளையும்  இழந்த ஈழமக்கள்  இந்த நிகழ்வை நடத்துவது இயல்பானது. தங்களது விடுதலைக்காக இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்துவதன் மூலம் தங்களது தாயக விடுதலைக்கான கனவு இன்னும் தொடர்கிறது எனபதை உறுதிப்படுத்துகின்றனர்.
  
     இதேபோல்  உலக நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் இந்த நினைவு நிகழ்வை நடத்துவது தங்களின் தாயக விடுதலைக்கு அடுத்தகட்ட நகர்வை சர்வதேச நாடுகளின் உதவியுடன் செய்வதற்கான  ஒரு செயல்பாடாக உள்ளது.
     

 இந்தியாவில் உள்ளவர்கள் இந்த நிகழ்வை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தோமேயானால் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் உள்ளது. இந்த இனப்படுகொலையை செய்வதற்கு சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருந்தது இந்தியா அரசு. இந்திய அரசு என்றால் சோனியா அரசு அல்லது மன்மோகன்சிங் அரசு என்றும், கருணாநிதி அரசு என்றும் அதேபோல சிங்கள அரசு என்றால் அது ராசபக்சே அரசு என்றும் தவறாகப் பொருள் கொள்கிறார்கள்.

    தமிழீழ மக்களைப் படுகொலை செய்த இந்திய ராணுவத்தையும், காவல் துறையையும் கொண்ட இந்திய அரசு என்பது நிலையானது, ஆட்சி என்பது மட்டுமே மாறக்கூடியது.
  
       இந்தியாவில் ஈழம் தொடர்பான கொள்கையில் இந்திய அரசின் நிலைப்பாடு என்பது ஒன்றுதான். காங்கிரசு ஆட்சியாக இருந்தாலும் பாரதீய சனதா ஆட்சியாக இருந்தாலும் இலங்கையை தங்களது நட்புநாடாக கருதி  சிங்கள அரசுக்கு ஆயுதங்களும் பயிர்ச்சியும் தொடர்ச்சியாக அளித்து வருகின்றனர்.
  

        தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களும், தமிழக மக்களின் வரியை சம்பளமாக வாங்கக்கூடிய இந்திய ராணுவமும், காவல்துறையும் இந்த இனப்படுகொலையை சிங்கள அரசுடன் சேர்ந்து செய்துள்ளது. இந்தியாவில் 9 கோடி தமிழர்கள் இந்தியனாக இருந்து இனஅழிப்பை  தடுக்காமல் விட்டுவிட்டோம்.

      இப்போது  முள்ளிவாய்கால் முடிவல்ல எனவும்,   நான்காம் கட்ட போர் நடக்கும் எனவும் கடந்த 6 ஆண்டுகளாக பலர் வீன் ஜம்பம் அடித்துக்கொள்கிறார்கள். சிலர்  மெழுகுவர்த்தி ஊர்வலம் என ஏதோ ஜெபக்கூட்டத்தை கூட்டி ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் இருப்பை பதிவு செய்கிறார்கள்.   
  
   இந்த இனப்படுகொலைக்குப் பின் எழுந்த தமிழின எழுச்சியை அடக்க , தமிழ்த்தேச  ஒருங்கிணைவைத் தடுக்க  திராவிட கட்சிகளும், திராவிட  இயக்கங்களும், சில  பெரியார் தொண்டர்களும்  பேதமின்றி  கூட்டுசேர்ந்துள்ளனர். இவர்கள் திராவிடதுக்கு முட்டுக்கொடுத்து நிற்கின்றனர். ஒருபக்கம் ஈழத் தமிழர்களுக்கு கண்ணீர்வடிக்கும் இவர்கள் மறுபக்கம் தமிழ்தேச விடுதலைக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

   கடந்த சில ஆண்டுகளாக இனப்படுகொலைக்கு எதிராக வீர முழக்கமிட்ட பல  இளைஞர்களை இவர்கள் தங்கள் வழியில் இழுத்துச் சென்று  ஒப்பாரி வைக்கும் கூட்டமாக மாற்றிவிட்டனர்.
    
     அவர்கள் ஏற்றும் மெழுகுவர்திகளும் , வருடாந்திர ஒப்பாரிகளும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித உரிமையையும் பெற்றுத்தரப்போவதில்லை. தனது சுதந்திரத்தை நேசிக்காதவன், தமிழ்த்தேசிய இன விடுதலைக்கு எதிரானவன்  ஈழவிடுதலைக்கு குரல் கொடுப்பது என்பது போலியானது மட்டுமல்ல அவன் செயல்  ஒரு ஏமாற்றுவித்தையும் கூட.

   முள்ளிவாய்கால் முடிவல்ல அது தொடரும் என்றால் அங்கு நடந்த இனப்படு கொலை தொடரும் என கூறுகிறார்களா? அப்படியானால் அது இந்திய, சிங்களவன் குரலாகத்தானே இருக்கமுடியும்?.

   மாறாக  மவுனிக்கப்பட்ட ஆயுதங்களின் செயல்பாட்டிற்கு முடிவல்ல என்றால்,  இன அழிப்புக்கு காரணமான இந்தியத்திற்கு எதிராக ஆயுதங்களை கூடவேண்டாம் அவர்கள் தங்களின்  கரங்களையாவது நீட்டி இருக்கவேண்டாமா?.


தமிழக இளைஞர்களே சிந்தியுங்கள்!
முள்ளிவாய்கால் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
இந்தியாவிற்கு எதிரான உங்கள் கரங்களை உயர்த்துங்கள்.



தமிழ்த் தேசம் வெல்லட்டும் !                     தமிழீழம் மலரட்டும்!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக